Friday 18 February 2011

புத்த‌ம் புதிதாய் மீண்டும் நீ எழுவாய்

வாழ்வில் மகிழ்ச்சி பலமுறை வந்திடும்
தாழ்ந்து போகையில் வாழ்க்கையே வெறுத்திடும்
தாழ்விலும் மனிதா சிந்தனை செய்திடு‍ _நீ
தாண்டி வந்திட்ட மகிழ்ச்சியின் கணங்களை

சின்ன‌க் குழந்தையாய் தாயின் முலையிலே
சுரந்த‌ பாலினைக் குடித்த‌து ம‌கிழ்ச்சி
க‌ன்ன‌ம் ந‌னைந்திட‌ பெற்ற‌வ‌ள் நித்த‌மும்
தந்த‌ முத்த‌ங்க‌ள் தித்திக்கும் ம‌கிழ்ச்சி

ப‌ள்ளிப் ப‌ருவ‌த்தில் ப‌ற‌ந்து திரிந்த‌தும்
புள்ளி மான்க‌ளாய் பாய்ந்து திரிந்த‌தும்
ப‌ண்ணிய‌ குறும்புக‌ள் ஆயிர‌ம் ஆயிர‌ம்
எண்ணிப் பார‌டா எத்த‌னை ம‌கிழ்ச்சி

ப‌ருவ‌ வ‌ய‌திலே ம‌ங்கையாய் க‌ளையாய்
பாடித் திரிந்த‌தை ஆடி ம‌கிழ்ந்த‌தை
ந‌ட்புக்க‌ள் சூழ‌ வாழ்ந்த‌தை எண்ணு
நிச்ச‌ய‌ம் அதுவே ம‌கிழ்ச்சி என்பாய்

க‌ன்னிய‌ர் த‌மைக் க‌ண்ட‌தும் அவ‌ர்
க‌டைக்க‌ண் பார்வை ப‌ட்ட‌து ம‌கிழ்ச்சி
சின்ன‌தாய் புன்ன‌கை சிந்தினால் போதும்
ஐயகோ ஐய‌கோ ம‌கிழ்ச்சி மேல் ம‌கிழ்ச்சி

வ‌ண்ண‌க் க‌ன‌வுக‌ள் க‌ண்டு திழைத்த‌தும்
வாழ்க்கையில் இல‌ட்சிய‌ம் கொண்டு ந‌ட‌ந்த‌தும்
திண்ணிய‌ முடிவுக‌ள் ந‌ட‌த்தி முடித்த‌தும்
எண்ணிப்பார் ம‌கிழ்ச்சியில் எப்ப‌டி மூழ்கினாய்

எத்த‌னை ப‌சுமை நினைவுக‌ள் நெஞ்சில்
இத்த‌னை போதும் உன்னை நீ மீட்க‌
எத்த‌னை இட‌ர்க‌ள் வந்த‌ போதிலும்
புத்த‌ம் புதிதாய் மீண்டும் நீ எழுவாய்






Thursday 10 February 2011

எப்போது முடிவுறும்

பச்சரிசிப் பல்லிரண்டு எட்டிப் பார்க்கயிலே‍ மகளே
பக்கமிருந்து அதை பார்த்து மகிழ‌வில்லை
எட்டி அடியெடுத்து வைக்கயிலே மகளே உன்
குட்டிக் க்ரம் பிடித்து தாங்கவில்லை
சுட்டித்தனம் பார்க்கத் தவிக்குதடி மனது உன்
பட்டுக்கன்னமதில் மெல்ல முத்தமிட‌த் துடிக்குதடி

ஓடிவந்து மடி வீழ்ந்து ஏறி மிதித்து உதைந்து
என் பெரிய மகள் விளையாட‌
அணைத்து முத்தமிட்டு என் ஆசை தீர்ப்பேனே
என் வயிறு தலையணை போல்
எப்போதும் இருக்குதெண்டு செல்லமாய் குத்தி
மெல்ல வயிற்றில் தலை சாய்த்து
இடுப்பை வளைத்து அணைப்பான் என் மகன்

வாசலையே பார்த்திருந்து வேலைவிட்டு வந்தவுடன்
வேணுமென்றே கோபம் கொண்டு
விளையாட்டாய் சண்டை போட்டு
காதலுடன் ஊடலுமாய்
கணவனோடு வாழ்ந்தேனே

எப்படிப் பிரிந்து வந்தேன்.. ஏனிந்த பிரிவுத்துயர்
எப்போது முடிவுறும் என் ஏக்கமும் வேதனையும்
இதற்கு மேல் முடியாது இறைவா என்
இதயத்திற்கு சக்தி கொடு...