Saturday 29 December 2012

ஒரு மௌன யுத்தம்...

பேச்சடங்கிப் பலயுகம் போல் தோன்றுது...

பேசாத வார்த்தைகளை எனக்குள்ளே பேசிப் பேசி..
நாசி வரண்டு உன் சுவாசம் தேடுது...
ஓசையற்ற என் விசும்பலூடே
ஓராயிரம் முறை உன் சட்டை பிடித்து..
ஓங்கி உலுப்பிக் குலைகிறேன்...
அது கூடக் கற்பனையில் தான்...
உற்றவனைக் கூட தொட்டுணர முடியா தூரம்...
கற்பனை வாழ்க்கை தான் நான்
கண்ட மிச்சமானதோ...

பொசுக்குப் பொசுக்கெனக் கோபம் வரும்
பொசுங்கிவிடும் அதுவாகவே சில நிமிடத்தில்...
ஆண்மை குடிகொள்ளும் உன்
அடர்ந்த மீசைக்குள்
ஆணவத்தை.. தேடித் தேடி ...
அலுத்துப் போனேன்...
உன் மோகன விழிகளுக்குள்
மிதந்து கொண்டிருக்கும் காதலை
மூடி மறைக்கும் ஊடல்
என்னை விம்மி வெதும்ப வைக்கும்...
திருவிழாவில் தொலைந்து போய்
திக்கி நிற்கும் குழந்தை போல..
ஆனாலும்... என் வரட்டுப் பிடிவாதத்தால்
தண்டனையும் எனக்கே தான்...
என் மௌனம் உனக்குள் மோதியிருக்கும்...
ஏனென்றால்... நாம் பேசியதை விட
அகராதியற்ற நம்
மௌன மொழிகளே நமக்குள் அதிகம்....
ஊடறுத்துப் பாயும் உன்
ஊமைப் பார்வைக்குத் தான்
எத்தனை சக்தி....
கூடறுத்துக் குலையறுத்து என்
உயிர் பறந்து தவிக்கிறதே...
போதும் உன் பொய்க் கோபம்...
போட்டுடைத்து விடு... எனக்குப்
போராட சக்தியில்லை.. உன்னோடு அல்ல
உன் மௌன யுத்தத்தில்... 



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!